தமிழ்நாட்டில் இன்று (01/11/2021) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளும் அமலுக்குவருகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் கணிசமாகக் குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, இன்றுமுதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவைத் தவிர பிற மாநில, மாவட்டங்களுக்கு இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவையான பணியாளர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளை நடத்தலாம். அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், நீச்சல் குளங்களைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.