விழுப்புரம் சரக டிஐஜியாக எழிலரசனும், மாவட்ட கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணனும் இன்று விழுப்புரத்தில் அவரவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ராதாகிருஷ்ணன் 2002ம் ஆண்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி செய்தவர். அந்த காலகட்டத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் துப்புரவு வேலை செய்த மாரியம்மாள் என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அது சம்பந்தமாக செய்தி சேகரித்த நாம் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் இந்த சம்பவம் குறித்து பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டோம்.
பொறுப்புடன் நமக்கு பதில் அளித்த அவர், பணி உயர்வு பெற்று மாறுதலில் சென்னைக்கு சென்றார். தற்போது மாவட்ட கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்று விழுப்புரத்திற்கு வந்துள்ளார். இவர் பொறுப்பேற்ற பிறகு கூறும்போது,
மக்கள் பிரச்சனைகளை, குறைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும், காவல்துறையினரும் நண்பர்களாக பழகும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி ஏற்று கொண்ட எழிலரசன் விழுப்புரம் சரகத்தை குற்றமில்லாத சரமாக உருவாக்கப்படும். 24 மணி நேரமும் எமது அலுவலகம் திறந்திருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை வந்து கூறலாம். அதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். கரோனா தொற்று காரணமாக அரசு விதிமுறைகளை காவல்துறையும், பொதுமக்களும் முக்கியத்துவமாக கருதி அதன்படி நடக்க வேண்டும் என்று கூறினார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் மற்றும் புதிய காவல்துறை உயர் அதிகாரிகளின் விவேகமான வீரியமான செயல்பாடுகள் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதை வரும் காலங்களில் தெரியவரும் என்கிறார்கள் நம்பிக்கையோடு விழுப்புரம் மாவட்ட மக்கள்.