ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் விவசாயிகளுக்கான வெல்லம் மற்றும் வெல்ல தூள் விற்பனை மையம் பெரிய அளவில் செயல்படுகிறது. இந்த சந்தையில் வெல்லத்தின் நிறத்தை மெருகேற்றி காண்பிப்பதற்காக வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர் அதில் மைதா சர்க்கரை, சூப்பர் பாஸ்ட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தி வருவதாக பல புகார்கள் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில் வெல்ல மார்க்கெட்டில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது தரமற்ற முறையில் இருந்த வெல்லம் 2900 கிலோவை பதிவு செய்து, அதில் நான்கு மாதிரிகளை சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளை சந்தித்த கலைவாணி " இதுவரை 5 முறை ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற வெல்லத்தை விற்பனைக்குக் கொண்டுவந்த 12 நபர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருக்கிறோம் . தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெல்ல உற்பத்தியாளர்கள் தரமற்ற வெல்லத்தை கொண்டு வந்தால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்வோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையை தயாரிப்பதற்கு மூலப் பொருளாக உள்ள வெல்லத்தில் அபாயகரமான கெமிக்கல் கலக்கப்படுவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.