விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவராக சுபா என்பவர் உள்ளார். அவர் அந்த ஊராட்சியில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் அரசு மது ஆகியவற்றை விற்றால் காவல்துறை மூலம் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிகையை சேர்ந்தனூர் ஊராட்சி முழுக்க ஒலிபெருக்கி மூலம் அவர் அறிவித்தார். அந்த எச்சரிக்கை அறிவிப்பில், ‘கள்ளச்சாராயம், அரசு மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை சேர்ந்தனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எப்போதுமே விற்கக்கூடாது. மீறி விற்றால் காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.