ஆண்பால், பெண்பால் என்ற இருபாலினத்தை மட்டுமே தெரிந்தவர்களுக்கு கடந்த காலங்களில் மூன்றாம் பாலினமாக திருநங்கை, திருநம்பி என்ற பாலினம் அறிமுகமாகியிருக்கும். ஆனால், உலகமெங்கும் 60 வகையான பாலினங்கள் இருப்பதாக சொல்கிறார் ‘இடையிலிங்கம்’ (இன்டர்செக்ஸ்) செயற்பாட்டாளர் சக்ரவர்த்தி .
இப்படி ஒரு பாலினம் இருப்பதே இங்கே பலருக்கு தெரியவில்லை; புரிதலும் இல்லை. ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் சேர்ந்து பிறப்பவர்கள் மட்டும் இடையிலிங்கம் இல்லை. அதைத் தாண்டி உடல் மாற்றங்கள் 70 வகை உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. மரபணு ரீதியிலாக பாதிக்கப்பட்டவர்கள், குரோமோசோம்கள் மாற்றம் பெற்றவர்கள் என பல வகைகள் உண்டு.
தமிழக அரசு இந்த பால்புதுமையினரை அடையாளப்படுத்தும் விதமாக திருநங்கை, திருநம்பி என்று அடையாள அட்டை வழங்கி வந்தார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் முதன்முறையாக இடையிலிங்க மனிதரான சக்ரவர்த்தி ‘இடையினம்’ என்ற அடையாள அட்டையை பெற்றுள்ளார். தொடர்ச்சியாக நக்கீரன் வழியாக அவரை இந்த சமூகத்திற்கு அடையாளப்படுத்தியதால் தான் இது சாத்தியமானது என்று நக்கீரனுக்கு நன்றி கூறினார்.