தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாக காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் உத்தரவின்படி தமிழக அரசு செயலர் கே.நந்தகுமார் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 316 பிரிவு 1வது உட்பிரிவின் கீழ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்படுகிறார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு அல்லது அவர் 62 வயதை அடையும் வரை, எது முந்தையதோ அது வரை இந்த பதவியில் இருப்பார். தமிழக ஆளுநர் மூலம் இந்த நியமனம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 2028ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார். டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பிரிவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் தற்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாகத் துறை ஆணையராகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.