நியோமேக்ஸ் எனும் நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிலர் ஒருதலையாக உள்ளனர் எனச் சந்தேகம் வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இதுவரை முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், ‘முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.