திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான திலகபாமா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் முபாரக் பேசுகையில், 'இரட்டை இலை சின்னம் எனது அருகில் உள்ளது. ஒன்று திண்டுக்கல் சீனிவாசன் மற்றொருவர் நத்தம் விஸ்வநாதன். எனது அப்பா 2015ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 இறந்துவிட்டார். இப்படி தந்தை தாய் இல்லாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தந்தையும் தாயுமாக எனக்கு இரண்டு அப்பாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சீனிவாசனும் மற்றொருவர் விஸ்வநாதனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் உள்ள தொண்டர்களும் என்னை அரவணைக்க உள்ளனர்' எனப் பேசினார். இவ்வாறு வேட்பாளர் பேசும்போது, தன்னையே அறியாமல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.