நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் என்ற ரவுடி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவிமேடு என்ற இடத்தில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டுவந்த முருகன் மீது 30க்கு மேற்பட்ட கடத்தல் வழக்குகள் இருந்த நிலையில் போலீசார் அவனை தேடிவந்துள்ளனர். தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இந்த என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. பதில் தாக்குதலின் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது சம்பவ இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை
இந்த என்கவுன்டர் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்தாலும் இதுதொடர்பான தகவல் நெல்லை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினரால் இந்த என்கவுன்டர் நிகழ்த்தப்பட்டிருப்பதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.