குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசியதாக நெல்லை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மேலப்பாளையும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 1ம் தேதி நெல்லை கண்ணனை பெரம்பலூரில் கைது செய்தனர். அவரை கடந்த 2ம் தேதி நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நெல்லை கண்ணனை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நெல்லை 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாஜிஸ்திரேட் கடற்கரை செல்வம் தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து நெல்லை கண்ணன் சார்பில் வக்கீல்கள் ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது கடந்த 10ம் தேதி விசாரணை நடத்தினார். பின்பு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவர், நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருநபர் ஜாமீன் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 11ம் தேதி சேலம் சிறையிலிருந்து நெல்லை கண்ணன் விடுதலை செய்யப்பட்டார். நேற்று காலை 10.30 மணி அளவில் நெல்லை கண்ணன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டிய குறிப்பாணை கிடைத்ததும் மேலப்பாளையத்தில் நேற்று மாலை 5 மணிக்கு கையெழுத்திட்டார். அவருடன், வக்கீல்கள் பிரம்மா, ஆரிஸ், மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.