நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோரின் கொடூரக்கொலையில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். நேற்று மாலையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது புதிய விசாரணை அதிகாரியை நியமித்துள்ளது தமிழக அரசு.

கடந்த 23ம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர், வேலைக்காரப்பெண் மூவரும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவாரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
உமா மகேஸ்வரி வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவில் வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் 2 முறை கடந்து சென்றுள்ளதும், அந்த காரில் இருந்து மதுரைக்கு 2 முறை செல்போனில் பேசியதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் சென்றது திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என உறுதி செய்யப்பட்டதும் அவரை கைது செய்து , அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

அரசியலில் சீனியம்மாளை மகேஸ்வரி வளரவிடாமல் தடுத்தார். அதற்காக என் தாய் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை அதன் காரணமாகவே நான் தனியாகவே அவர்கள் வீட்டிற்கு சென்று அதுபற்றி பேசினேன். அதுபற்றிய வாக்குவாதம் காரணமாக அங்கு நடந்த சம்பவத்திற்கு நான்தான் காரணம். இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று போலீசார் விசாரணையில் சொல்லியிருக்கிறான்.
இதற்கு வலுவாக ஆதாரம் சேர்க்கும் வகையில் அவனது கால்பாதத்தின் ரேகைகள் அந்த வீட்டில் தடயவியல் சோதனையில் சிக்கியிருக்கிறது. உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகை, மோதிரம், வளையல்கள் உள்ளிட்ட 5 நகைகளை போலீசார் அவனது வீட்டிலேயே மீட்டனர். தக்க ஆதாரங்களோடு கார்த்திகேயன் இன்று 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விசாரணை அதிகாரியாக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் கொலை நடந்த இடங்களில் நேரில் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.