திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜின் இரண்டாவது மகன் சுஜித் வில்சன் கடந்த 25ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள போர்வெல் குழியில் தவறி விழுந்தான். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தொடர்ந்து 4 நாட்களாக போர் குழியில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க தீவிரமாக போராடியும் சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் இறந்த நிலையில், இறுதியில் சுஜித்தின் உடலை வெளியே எடுத்தனர். அதைக்கண்டு தமிழக மக்களை பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ .பி. செந்தில்குமார் பிறந்தநாள் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடுவது வழக்கம். இந்த பிறந்தநாளை ஒட்டி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்களும் அங்கங்கே பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் பேப்பர்களில் விளம்பரம் கொடுத்தும், மேலும் நேரில் சென்றும் ஐ.பி.செந்தில்குமாருக்கு மாலை பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு கலைஞர் இறந்ததை முன்னிட்டு ஐ.பி.செந்தில்குமார் பிறந்தநாளை தவிர்த்தார். இந்த ஆண்டு சிறுவன் சுஜித் மரணத்தால் தமிழகமே சோகத்தில் இருந்து வரும் நிலையில், "கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பேனர் வைப்பது போஸ்டர் அடித்து ஒட்டுவது விளம்பரம் கொடுப்பது தவிர்த்துவிடுங்கள். அதோடு என்னை நேரில் வந்து வாழ்த்து சொல்வதையும் தவிர்த்து விடுங்கள்" என தனது பேஸ்புக் மற்றும் வாட்சப் மூலமாக கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.