தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரில் உள்ளது புங்கவர் நத்தம் கிராமம். சுமார் 30 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமம். அங்கே வசிப்பவர் சண்முகம் (58) அவரது மனைவி மாரியம்மாள் (45) தம்பதியர். கூலி வேலைச் செய்து வரும் சண்முகம் ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவியைப் பிடிக்கததால் அவரை ஒதுக்கிவிட்டு இரண்டாம் தாரமாக மாரியம்மாளைத் திருமணம் செய்திருக்கிறார். மாரியம்மாளும் அங்குள்ள பள்ளியில் துப்புரவுவேலைகளைச் செய்துவிட்டு கிடைக்கும் கூலி வேலையையும் பார்த்திருந்திருக்கிறார். அவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன். இவர்களில் இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் செட்டிலாகிவிட, கடைசி மகன் நர்சிங் படித்துவிட்டு அது தொடர்பான வேலையிலிருக்கிறார்.
இந்த மாரியம்மாள் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருப்பவர் சித்திரை வேலுவின் மகன் ராமமூர்த்தி. 28 வயதேயானாலும் திருமணமாகாதவர். கட்டுமானப் பணியின் கொத்தனார் வேலைக்குப் போய் வருபவர். இதனிடையே சூழல் காரணமாக மாரியம்மாளுக்கும் அவளைவிட வயது குறைந்த ராமமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு அது அவர்களை நெருக்கமாக்கியுள்ளது. அந்த உறவு அவர்களைப் படுக்கையறைவரை கொண்டு போயுள்ளது. கணவர் இல்லாத நேரம் பார்த்து மாரியம்மாள் தகவல் தர, அவரது வீட்டிலேயே இருவரும், ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இந்தக் முறையற்ற தொடர்பு கணவர் சண்முகத்திற்குத் தெரியவர, அவர் பல தடவை மனைவி மாரியம்மாளைக் கண்டித்திருக்கிறார். திருந்தவில்லையாம்.
வேலி தாண்டிய ஆடு, தொடர்ந்து வெளியே மேய்வதைப் போன்ற நிலையானது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் கூத்தைச் சண்முகம் நேரில் பார்த்துக் கொதித்துமிருக்கிறாராம். இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த சண்முகம் சம்பவ நாளான நேற்று, தான், வெளியூருக்கு வேலையின் பொருட்டுச் செல்வதாக மாரியம்மாளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். கணவரின் திட்டமறியாத மாரியம்மாள் தன் ராமமூர்த்தியை வரச்சொல்ல, இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஒரே பாயிலேயே இருவரும் ஒன்றாகத் தூங்கியுள்ளனர். திட்டப்படி நடு இரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்த சண்முகம், ஒரே பாயில் மனைவி மாரியம்மாளும், ராமமூர்த்தியும் அயர்ந்து தூங்குவதைக் கண்டு ஆத்திரம் அளவு கடந்திருக்கிறது. அரிவாளால் ராமமூர்த்தியின் தலையில் தாக்க உறக்கத்திலேயே இருவரையும் மாறி மாறி வெட்டித்தள்ளியிருக்கிறார் சண்முகம். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாரியம்மாள், ராமமூர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள்.
சண்முகம் இன்று விடிந்த காலைப் பொழுதிலேயே பசுவந்தனைக் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமொழி இருவரது உடல்களையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வயது மீறியமுறையற்ற தொடர்பு இரட்டைப் படுகொலை, தூத்துக்குடி மாவட்டத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.