நெல்லை மாவட்டம், சுத்தமல்லி நகர காவல் நிலைய பெண் எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசா ஆலய பாதுகாப்பிற்குச் சென்ற போது வன்மம் காரணமாக ஆறுமுகம் என்பவரால் கத்தியால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
தகவலறிந்து நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பியான சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இருவரும் மருத்துவமனை சென்று சிகிச்சையிலிருந்த மார்க்ரெட் தெரசாவிற்கு ஆறுதல் சொன்னவர்கள், அவரது துணிச்சலையும், மன உறுதியையும் பாராட்டினர்.
நாம் எஸ்.பி.சரவணனைத் தொடர்பு கொண்ட போது, "எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசா பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், எதையும் துணிச்சலாகவும், மன உறுதியுடனும் எதிர்கொள்வார். அப்படித்தான் இந்த சம்பவத்திலும் போல்டாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டுள்ளார். பணியின் போது கவனமாகவும் சிறப்பாகவும் செயல்படுபவர். சேரன்மகாதேவிப் பக்கம் ஒரு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தைரியமாக எதிர் கொண்டு காவல் நிலையம் கொண்டு வந்தவர் எஸ்.ஐ. தனக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அவர் மனம் தளரவில்லை. ஊக்கமாகத்தானிருக்கிறார். துவள வேண்டாம் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறேன்" என்றார்.