நெல்லை மாவட்டத்தின் சிவகிரி நகரை அடுத்த உள்ளாறு பகுதியில் நான்கு வழிச்சாலை அமைப்பிற்கான திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் விவசாயிகள். திருமங்கலம்- செங்கோட்டை வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் அரசின் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் வகையில் அதற்கான வருவாய் தனிப்பிரிவு சிவகிரியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலை, விளை நிலங்கள் வழியாகச் செல்வதால் தங்களின் வாழ்வாதாரம் பொருட்டு, அந்த வழியிலுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பின் பொருட்டு மனிதச் சங்கிலிப் போராட்டம் உள்ளாறிலிருந்து வெற்றிலைக் கொடிகால் பகுதி வரை நடந்ததில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் தேசியக் கோடி பிடித்துக் கொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த அறப்போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் மாடசாமி, பார்த்தசாரதி ஜெயராமன் விஸ்வநாதபேரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். விவசாயகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற நான்கு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். ஆனாலும் அரசு எங்களின் நியாயமான கோரிக்கையைப் புறக்கணிக்கிறது. நாங்கள் விளை மண்ணையும், தேசத்தையும் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். என்பதை வெளிப்படுத்தவே இந்த அறவழிப் போராட்டம் என்கிறார் விவசாய சங்கத் தலைவரான மாடசாமி. வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தனியொருவன் என்று இல்லாமல் குடும்பம் குடும்பமாக களமிறங்கியுள்ளனர் விவசாயிகள்.