ஒவ்வொரு வாரமும், வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்தந்த மாவட்டத்தை சார்ந்த மக்கள் தங்களின் குறைகள் குறித்து தங்களது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக்களை வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு முகாம் இன்று (16/09/2019) நடைபெற்றது. அங்கு இரண்டாவது வாரமாக மனு கொடுக்க வந்த முதியவர் ஒருவர், கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என கூறி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தவரைப் போலீசார் சுற்றி வளைத்து மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கி, அவரின் மேல் தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் போதர் என்பது தெரிய வந்தது. தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அதில் வேறு ஒரு நபர் வீடு கட்டி வருவதாகவும், இதை தடுத்து நிறுத்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்கள் அளித்தும், எந்த நடவடிக்கை இல்லை என்பதால் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.