சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.டெக்., பாடப்பிரிவுகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சேலத்தில், கடந்த 1997- ஆம் ஆண்டில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயல்கல்வி பயின்று வருகின்றனர்.
மேற்சொன்ன நான்கு மாவட்டங்களில் உள்ள 101 அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. இப்போது 28 துறைகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ளன.
தொழிற்சார்ந்த பாடப்பிரிவுகளான எம்.பி.ஏ., எம்.டெக்., ஆற்றல் தொழில்நுட்பம் (எனர்ஜி ஸ்டடீஸ்) ஆகிய படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இப் பாடப்பிரிவுகளுக்குத் தற்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு எனப்படும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம், தொழிற்படிப்புகளை படிக்க விரும்பும் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மாணவர்களை பெரியார் பல்கலைக்கழகத்தை நோக்கி வரச் செய்யும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கேட்டபோது, ''ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம் இத்துறைகளில் பயிலும் மாணவர்கள் அகில இந்திய அளவில் உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் நிதி வழங்கும் முகமைகளுக்கு திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்து நிதியுதவி பெற வாய்ப்பாக அமையும்.
தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வழிவகுக்கும். வெளிநாட்டு மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகளைப் பெறவும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் அடித்தளமாக அமையும்,'' என்றனர்.
ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகம் வழங்கி வரும் எம்.சி.ஏ. பாடப்பிரிவுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கீகாரம் கிடைக்க முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர்களை துணைவேந்தர் குழந்தைவேல் பாராட்டினார்.