கரோனோ நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்திலிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் காணொளி காட்சி மூலம் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் பேசும்போது, “கோமுகி அணையிலிருந்து மணிமுத்தாறு ஆற்றில் வரும் தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லும் திட்டத்தால் விருத்தாசலம், கம்மாபுரம், புவனகிரி ஒன்றியங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வருவது தடைபட்டு விவசாயம் பாதிப்படையும், விவசாயிகள் பாதிப்பு அடைவர். அதனால் இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான மூன்று ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். கரும்பு பயிருக்கான ஊக்கத்தொகையை தீபாவளிக்குள் வழங்கவேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, “பகுதி வாரியாக ஆய்வு நடத்தி காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார். சிதம்பரம் ரவீந்திரன் பேசும்போது, “வடகிழக்கு பருவமழை குறைவாக இருக்கும் என்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாசன நீர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் பூச்சு மருந்து, களைக்கொல்லி மருந்துகளின் தரம், தன்மை, விலை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். அதற்கு மாவட்ட ஆட்சியர், “தனியார் பூச்சி மருந்து கடைகளில் மருந்தின் தரம், தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அந்த குழுவினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
கார்மாங்குடி வெங்கடேசன் பேசும்போது, “ஒருங்கிணைந்த பண்ணையம் அனைவரும் பயன்படும் வகையில் முறையாக செயல்படுத்த வேண்டும். சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வாய்க்கால்கள், குளங்களை முழுமையாகத் தூர்வார வேண்டும்” என்றார். அதற்கு, “வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் ஆட்சியர்.
மூர்த்தி எனும் விவசாயி பேசுகையில், “வீராணம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை” எனக்கூற அதற்கு மாவட்ட ஆட்சியர், “கடைமடை பகுதிவரை தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இதேபோல் நல்லூர், மங்களூர், வேப்பூர் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், வனத்துறை மூலம் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் பெரும்பாலான விவசாயிகள் ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, வேளாண்மை இணை இயக்குனர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காமராஜ், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரர் சாகாமூரி, "இந்த ஆண்டு அதிக மகசூல் காரணமாக 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 54,807 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் போன்றவை எளிதாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 1,11,904 விவசாயிகள், 97,517 ஏக்கரில் பதிவு செய்து ரூபாய் 62 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.297 செலுத்தி காப்பீடு செய்யலாம். இதற்கு பதிவு செய்ய நாளை கடைசி நாள்" என்றார். மேலும் பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 1,074. இத்திட்டத்தில் சேர 15.11.2020 அன்று பதிவு செய்ய வேண்டும். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 469 செலுத்தி அடுத்த மாதம் நவம்பர் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் சம்பா சாகுபடிக்கு 880 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதுதவிர வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் 140 மெட்ரிக் டன்னும், விதை சுத்திகரிப்பு நிலையம் மூலம் 340 மெட்ரிக் டன்னும் கையிருப்பு உள்ளது" என்றார்.