சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அவ்வப்போது தலைதூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம், இப்போது நெல்லையையும் தொற்றிக் கொண்டது. நேற்று பைக் ரேசில் ஈடுபட்ட 10 பேர் மீது நெல்லை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அதிவேகமாக வண்டி ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் சென்றது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாகசத்திற்கு பயன்படுத்திய 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பைக் ரேசில் ஈடுபட்ட 10 பேரையும் நேராக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர், அங்கு எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் படும் துன்பத்தை பார்க்க வைத்தனர்.
பைக் சாகசத்தில் ஈடுபட்டு, கை, கால்களை முறித்துக் கொண்டால், எந்தவிதமான துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்த்தவே காவல் துணை ஆணையர் சரவணன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.
காவல்துறையினர் இப்படி மாற்றி யோசிப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இனிமேலாவது திருந்துங்கள் சாகச பிரியர்களே.