கரோனா தொற்று அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24 முதல் தேசமே 144 லாக் டவுணில் நீடித்து வருகிறது. வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களான மருந்து மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆண்டாண்டு காலம், அரசு மது வகைகளையே குடித்து உடல் முழுக்க ஆல்கஹால் ஏறிப் போன மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் அரசு மதுக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு கொரோனா காலம் வரை வேறு எந்த வகை பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மதுக்கடைகளுக்கு மட்டும் தடையே விதிக்கப்பட்ட வரலாறில்லை. காரணம் அரசுகளுக்கு வருமானம் பாதிப்பே. ஆனால் மதுக்கடைகளில் கூட்டம் திரளுவதால் கரோனா தொற்றிற்கு சுளுவாக வழிவகுத்து விடும், என்ற அச்சம் காரணமாகவே லாக்ட்வுண் ஆரம்பித்த போதே அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன.
திடீரென டாஸ்மாக் மூடப்பட்டதால் மது உபயோகிப்பவர்கள் ஒரு லெவலுக்கு மேல் அதற்காக திண்டாடித் திணறி இருக்கிறார்கள். உயிரைத் தக்கவைக்க போதையைத் தேடியவர்கள் மாற்றுப் போதையான கஞ்சா, மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற மெத்தனால் ஸ்பிரிட் வரையும் போய் விட்டனர்.
போதைக்காக அல்லாடும் குடி அன்பர்களின் தவிப்பை கள்ளச்சாராய உலகம் கவனிக்காமல் இல்லை. போதைக்காக என்னவிலையேனும் கொடுப்பார்கள் என்பதால் அடங்கிக் கிடந்த கள்ளச்சாராய ஊறல் உற்பத்தி உயிர் பெற்றது. தென்மாவட்டத்தில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறங்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது தற்போதைய கரோனா முடக்க காலத்தில் தொழிலாகவே மாறியிருக்கிறது. நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஏரியாவின் காட்டுப்புறப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாகவே மாறிப் போனது. காரணம் குவார்ட்டர் மது, கள்ளச் சந்தையில் 300- 400 என்றான நிலையில் அதே அளவு கொண்ட சாராயம் 150– 200 விலை என்பது காய்ச்சுபவர்களுக்கு கொள்ளை லாபம் தான்.
சாத்தான்குளம் அருகிலுள்ள மீரான்குளம் வாழைத் தோட்டத்தின் மத்தியில் உறவினர்களான மூக்காண்டியும், ராஜ்குமாரும் தங்களின் குடும்ப சகிதம், கள்ளச்சாராய ஊறல் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனையை மேற் கொண்டிருக்கிறார்கள், இந்த தகவல் மாநில உளவுப் பிரிவையும் தாண்டி மத்திய உளவுப் பிரிவு கண்காணித்து தகவல் தர, தூத்துக்குடி மாவட்டத்தின் மதுவிலக்குப் பொறுப்பு நெல்லை அதிகாரிகள் திடீர் ரெய்ட் அடிக்க, மூக்காண்டியும், ராஜ்குமாரும், 50 லிட்டார் ஊறல் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயத்தோடு சிக்கியிருக்கிறார்கள்.
பொறுப்பு மது விலக்குப் பிரிவினர் பிடிபட்டவர்களையும் ஊறல் மற்றும் சரக்கு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அங்கே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.