காரைக்குடியில் நடைப்பெற்று வரும் பாதாளச்சாக்கடை பணிகளில் நகராட்சி அலட்சியம் காட்டியதின் விளைவாக, பள்ளி வாகனம் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் பாதாளச்சாக்கடை பணியில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாளச்சாக்கடை திட்டப் பணி நடைப்பெற்று வருகின்றது. ஏறக்குறைய 31,725 வீடுகள் மற்றும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ள இத்திட்டத்தில் தெருக்கள் தோறும் குறைந்தப்பட்சம் ஆட்கள் நுழையும் அளவிலான குழிகள் 5க்கு குறையாமலும், இணைப்புக்குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.
இப்படி தோண்டப்படும் குழிகள் முறையாக மறுபடியும் மூடப்பட்டுள்ளதா.? விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆய்வு செய்வதில்லை நகராட்சி நிர்வாகம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உண்டு. இந்நிலையில், காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் தம்பதிகளான சண்முகம் - ரேவதி தங்களது பணிக்காக, தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அரியக்குடியை நோக்கி சென்றுள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் சென்று கொணடிருந்த போது, தங்கள் முன்னால் மூடப்படாத பாதாளச்சாக்கடை குழி இருந்தமையால், எதிரே வந்த பேருந்திற்காக அங்கேயே வண்டியை நிறுத்தினர்.
இவர்கள் பின்னால் வந்த மற்றொரு பள்ளி வாகனமோ இவர்கள் நின்று கொண்டிருந்ததை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோத, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரேவதி. கணவர் சண்முகம் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "முறைப்படி பாதாளச்சாக்கடை மூடியிருந்தால் இந்நிலை நடந்திருக்காதே பாதாளச்சாக்கடை பணியில் அலட்சியம் காட்டுகின்றது நகராட்சி மாவட்ட ஆட்சியர் தலையிட்டால் இனியொரு உயிர்பலி வராது என கோரிக்கை விடுத்துள்ளனர் காரைக்குடி பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.