இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிகளில் பயிலும் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம் என்று கூறி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், “திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுகாதாரமான குடிநீர், மாற்று கழிவறை இல்லை.
இருக்க கூடிய கழிவறையையும் மாணவர்கள் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதிப்பது இல்லை. பள்ளியின் கட்டடம் மிகவும் பழமையானது, இடியும் நிலையில் உள்ளது. மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் சாக்கடை கழிவுகள் செல்கிறது. அது மட்டும் இல்லாமல், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷிலா அவர்கள் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களை தனது வீட்டு வேலைக்குப் பயன்படுத்துகிறார்.
அதற்கு மறுக்கும் மாணவர்களைப் பள்ளியைவிட்டு விரட்டி அடிக்கிறார். இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட மாணவர் புகார் அளித்துள்ளார். பள்ளி மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தனர்.