ஆரம்ப சுகாதார நிலையம் என்பது கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கக்கூடிய ஒரு அடிப்படை மருத்துவ நிலையம் ஆகும். 1978-ல் உலக சுகாதார அமைப்பு நிறைவேற்றிய ‘அல்மா அடா’ அறிக்கையின்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. நல்ல நோக்கத்துடன் உலகளவில் செயல்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centre) செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், ‘மூடியே கிடக்கின்றன.. டாக்டர்கள் வருவதில்லை.. தரமான மருத்துவம் இல்லை’ என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ளன.
விருதுநகர் மாவட்டம் – கன்னிசேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடந்திருப்பதைப் பார்ப்போம்.
விருதுநகர் அருகில் உள்ள சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கப்பாண்டி. இவருடைய மனைவி சுகந்தி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கர்ப்பிணி என்பதால், தன் 2-வது மகள் கிரிஷ்மாவை (4 வயது) அழைத்துக்கொண்டு, கன்னிசேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றார். பரிசோதனையை முடித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது. உணவு அருந்தியவுடன், கிரிஷ்மாவுக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அங்கு குடிநீர் பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட்டை, குடிநீர் என்று நினைத்துக் குடித்துவிட்டாள். ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கியதும், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டாள் கிரிஷ்மா. தற்போது, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறாள்.
மக்கள் வந்து செல்லும் மருத்துவ நிலையத்தில், பாதுகாப்பற்ற முறையில், அதுவும் பொது இடத்தில் குடிநீர் பாட்டிலில் ஆசிட்டை நிரப்பி வைத்திருக்கின்றனர். இந்த அலட்சியமானது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்குக் கிடைத்துவரும் மருத்துவ சேவையின் தரத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.