தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் 80 சதவிகித அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வைத் தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாகத் தொழிற்சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 25ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அதன்படி 25ஆம் தேதி காலை 6 மணி முதல் போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திரண்டு சென்று பணிமனைகள் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாசிமகத் திருவிழா சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிவனை வழிபட்டு வருவார்கள். ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் பஸ் கூரைகளின் மீது ஏறி நின்றபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்து இயங்காததால், ஒவ்வொரு போக்குவரத்துப் பணிமனைகளிலும் அரசுப் பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஷேர் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.