Skip to main content

“நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல..” - அன்புமணி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

NEET Jagadeeswaran issue anbumani tweet
கோப்புப் படம் 

 

“நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி  ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

 

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது  மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இதுதான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

 

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்துவிட்ட தேர்வு. அதைத் தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில்,  அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

 

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

 

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள், நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்