நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- திமுகவின் தேர்தல் அறிக்கையில், மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குகின்ற பிரிவு 361 நீக்கப்படும்.
- உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.
- ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு/நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
- ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
- இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்.
- காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்.
- தமிழ் நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
- மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
- நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
- ஒன்றிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- ஜிஎஸ்டி சட்டங்கள் திருத்தப்படும்.
- குடியுரிமைச் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படும்.
- நாடு முழுவதும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
- ரயில்வே பயணத்தில் பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
- பெட்ரோல் விலை 75 ரூபாயாக குறைக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.