‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திண்டுக்கல் வருகை தந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் சீலப்பாடி பிரிவில், 40அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், திமுக கொடியை ஏற்றிவைத்து வேன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மீது மோடிக்குக் கோபம்.
இதன் காரணமாக, தமிழகத்திற்கு எதுவும் செய்து தரமறுக்கிறார். பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய 15,000 கோடி ஜிஎஸ்டி வரி பணத்தையும், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க மறுக்கிறார், காரணம் கேட்டால் நிதி நெருக்கடி எனக் கூறுகிறார். பிரதமர் மோடி. இதனைக் கேட்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் தட்டிக் கேட்க மறுக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், மோடி சொன்னதால் தமிழகத்தில் நீட்தேர்வுக்கு அனுமதி அளித்தார், முதல்வர் பழனிசாமி. இதன் காரணமாக கடந்த மூன்று வருடத்தில் 16 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் 80 நாள் அடைத்து வைத்திருந்தனர். 'அம்மா இட்லி சாப்பிட்டார் என நான் போய் சொன்னேன், எங்களை சொல்லச் சொன்னார்கள்' என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார். அதிமுக ஆட்சி கேவலமான ஆட்சி என விமர்சித்தவர் சீனிவாசன். 'ஜெயலலிதா, டிடிவி தினகரன் கோடி கோடியாகப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள்' என சீனிவாசன் கூறினார்.
தமிழக அரசு பொங்கல் பரிசாகக் கொடுத்த 2,500 ரூபாய், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வந்துவிடும் எனப் பேசியவர் சீனிவாசன். சொத்துக் குவிப்பு வழக்கில், கோடிக்கணக்கில் ஊழல்செய்து ஜெயிலுக்கு சென்றுவந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், 'A-1' குற்றவாளியான ஜெயலலிதாவின் சொத்துகள் மட்டும் ஏன் முடக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். கலைஞர் ஆட்சியின்போது தொழில்துறையில் தமிழகம் முதலாவது இடத்தில் இருந்தது, ஆனால், அதிமுக ஆட்சியில் தற்பொழுது தொழில்துறையில் தமிழகம் 14-வது இடத்தில் உள்ளது எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களது கோரிக்கைகளை திமுக ஆட்சிக்கு வந்தபின்பு நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பேகம்பூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு, 25 அடி உயரம் கொண்ட மலர்மாலை, கிரேன் மூலம் தொண்டர்களால் அணிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட அவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் திறந்த வேனில் ஊர்வலமாக வந்தார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.
இதில், முன்னாள் அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி, சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயன், முன்னாள் நகரச் செயலாளர்கள் பசீர் அகமது, நடராஜன், ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.