சிலவகை காதல்.. தவறான தொடர்புகள்.. கொலைகளெல்லாம் விசித்திரமாக உள்ளன. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கட்டக்கஞ்சன்பட்டி என்ற கிராமத்தில் அப்படி ஒரு கொலைதான் 7-ஆம் தேதி நடந்திருக்கிறது.
19 வருடங்களுக்கு முன் அங்காளஈஸ்வரி, தனது 16 வயதிலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான திருமுருகன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 18 வயதில் நந்தினிபிரியா என்ற மகளும் 15 வயதில் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 18 வயதிலேயே மகள் நந்தினிபிரியாவுக்கும் திருமணம் நடத்திவிட்டார் அங்காளஈஸ்வரி. குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால், சிங்கப்பூர் போய் 4 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்துவிட்டு, கட்டக்கஞ்சன்பட்டிக்கு வந்தார் அங்காளஈஸ்வரி. திருமணம் முடிந்து மகள் நந்தினிபிரியா அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டதாலும், பகலில் மகன் நவீன்குமார் பள்ளிக்கூடம் சென்று விடுவதாலும், அந்த நேரத்தில் பக்கத்திலுள்ள சந்து வீட்டுக்கு அடிக்கடி சென்று அடைக்கலம் என்பவருடன் பழகினார். இந்தப் பழக்கத்தை வைத்து அடைக்கலத்திடம் ரூ.2 லட்சம் வரை வாங்கினார். ஆனாலும், மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலத்துக்கு குடைச்சல் தந்தார். பழக்கம் ஒருபுறம், கொடுக்கல் வாங்கல் இன்னொருபுறம் என, இந்தத் தகாத பழக்கம் அடைக்கலத்துக்கு கசந்தது. அங்காளஈஸ்வரியோ, பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டாள். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்த அடைக்கலம், 7-ஆம் தேதி மதியம், சந்து வீட்டில் தன்னைச் சந்திக்க வந்த அங்காளஈஸ்வரியைக் கொலை செய்துவிட்டான்.
அங்காள ஈஸ்வரியின் தந்தை காளிமுத்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அடைக்கலத்தைக் கைது செய்தது அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம்.
வேலைக்குச் செல்லும் கணவன், புதுக்குடித்தனம் நடத்தும் மகள், பள்ளியில் பயிலும் மகன் என குடும்ப வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தபோது, 35 வயதில் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், சம்பந்தப்பட்டவனாலேயே கழுத்து நெறிக்கப்பட்டு உயிரை விட்டிருக்கிறாள் அங்காள ஈஸ்வரி.