Skip to main content

நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்!- உயர்நீதிமன்றம்!

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

neet exam student chennai high court


நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு தொடர்பாக, சுதந்திரமான அமைப்பு விசாரிப்பது குறித்து ஜனவரி 21- ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டின் நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) கடந்த அக்டோபர் 5- ஆம் தேதி வெளியிட்டபோது, கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் 700- க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 17- ஆம் தேதி 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இரு பட்டியலையும் ஸ்கீர்ன் ஷாட் எடுத்த மாணவன் மனோஜ், தனக்கு குறைத்து மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்  சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தரப்பில், கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மாணவர் தாக்கல் செய்த மதிப்பெண் சான்று ஸ்கிரீன் ஷாட் திரிக்கப்பட்டது என்றும், 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், உண்மையை கண்டறிய விசாரணை தேவை என்றும், தன் மீது தவறு இருந்தால் சட்ட பின் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.பிரியா ரவி ஆஜராகி உத்தரவாதம் அளித்தார்.

 

கலந்தாய்வு அமைப்பு தரப்பில், மனுதாரருக்கு ஏற்கனவே தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழக்கு நிலுவை காரணமாக சேர்க்கை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட்டார்.

 

இந்த விவகாரத்தில் சுந்தந்திமான ஒரு அமைப்பை கொண்டு விசாரிப்பது குறித்து ஜனவரி 21- ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, மனுதாரர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் படிப்பை கைவிட வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும், மாணவர் மட்டுமல்லாமல் அவரது பெற்றோரும் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டு, விசாரணையை ஜனவரி 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

சார்ந்த செய்திகள்