நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் 10- ஆம் தேதி அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துகளை இக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட அறிக்கையை தங்களது பரிந்துரைகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று (14/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், "மக்கள் கருத்துகள், பரிந்துரைகள் அடங்கிய 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 85 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்" என்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையின் அம்சங்கள் என்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!
மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தியாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த பரிந்துரை.
மாநில அரசின் நுழைவுத்தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவச் சேர்க்கை நடத்தலாம்.
பரிந்துரையை சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெற்றால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.