Skip to main content

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” - அன்புமணி வலியுறுத்தல்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
"NEET exam should be canceled permanently" - Anbumani insists

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “ சில போட்டித் தேர்வுகள் குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் முதுகலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23 அன்று நடைபெறவிருந்த நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சகம் மனப்பூர்வமாக வருந்துகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வுச் செயல்முறையின் உண்மைத் தன்மையை பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுங்கள்!. இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு  குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.

முதுநிலை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு தேர்வு மையம் உள்ள ஊரில் தங்கியிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதைப் போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்