செப்.12 அன்று மூன்று மாணவர்களின் உயிர் பலி வாங்கிய நீட் தேர்வு, மறுநாளான இன்று நடைபெற்று முடிந்தது.
நெல்லை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 17 மையங்கள், தென்காசி மாவட்டத்தின் மூன்று என்று 20 மையங்களில் 7500 மாணவ மாணவியர் நீட் தேர்வுக்காக குறிப்பிட்டபடி காலை 11.30 மணிக்கே சம்பந்தப்பட்ட சென்டர்களில் ஆஜரானார்கள். வழக்கப்படி மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது. மாணவிகள் செயின் மற்றும் காதுத் தோடுகளுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் கொண்டை ஜடை இல்லாமல் விரித்த தலையுடன் அனுப்பப்பட்டனர்.
ஆரம்பக்கட்டங்களில் சென்டருக்குள் மாணவ மாணவியர் செல்லும் முன்பாக அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டுகள் சோதனையிடப்பட்டன. பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மையத்தின் முன்னே அவர்களின் முகக்கவசம் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பக்கம் வடக்கு புதூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சென்டர் காட்டுப் புறத்தில் உள்ளது.
மதியம் 2-5 மணி தேர்வுக்காக காலை 9 மணிக்கே சென்ற 204 மாணவ மாணவியர்கள் அந்த பள்ளியின் முன்னே அமர வசதி இல்லாததால் பக்கத்திலுள்ள முட்தரை மற்றும் வேலி புதர் மரக்காடுகளின் முன்னே அமர்ந்து தான் காலை உணவை அருந்த வேண்டிய கொடுமையும் நடந்தேறியிருக்கிறது. மழை வந்தாலும் காற்றடித்தாலும் காட்டுப்புறத்திலுள்ள முள் மரங்களில்தான் ஒண்டவேண்டிய நிலை.
இந்த சூழல் 'கெட்டப்பே' பல மாணவ மாணவியரின் மனதை பாதித்திருக்கிறது. மாணவிகளின் அந்தச் சூழலை நமது போட்டோகிராபர் படமாக்கிக்கொண்டிருந்தபோது அதைத்தடுக்க பரபரவென்று வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. விமலா படமெடுக்கக்கூடாது என்று நமது போட்டோகிராபரை அரட்டி விரட்ட, நாங்கள் செண்ட்டரினுள் வரவில்லை. வெளியே காட்டுப்புறத்தில் படமெடுப்பதற்கு தடையா என்று கேட்டும், அவர் விரட்டலை விடவில்லை. உயரதிகாரியின் தலையீட்டின் பிறகே அந்த எஸ்.ஐ அங்கிருந்து கிளம்பினார்.
இதனிடையே நீட் தேர்வை எதிர்த்து பாளை பெரியார் சிலை முன்பு திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் தலைமையிலும், மக்கள் அதிகார அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேரன்மாதேவியின் ஸ்கேட் கல்வி நிறுவனத்தின் மையம் முன்னே நீட் தேர்வை எதிர்த்து சி.பி.ஐ. யின் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "நீட் தேர்வை ரத்து செய். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாதே" என்று கோஷமிட்டனர். போராட்டமும் பரபரப்புமாகக் காணப்பட்டது நீட் தேர்வுக் களம்.