இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு இன்று (05.05.2024) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. வரும் ஜூன் 14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவர்களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்குத் தேசிய தேர்வு முகமை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதில், “தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்கு மதியம் 01.30 மணிக்கு முன்பாக வர வேண்டும். மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தேர்வர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். காகிதம், பென்சில், கால்குலேட்டர், பிரேஸ்லெட், வாட்ச் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை. மாணவர்கள் குறிப்புகளை எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் தனியாக வழங்கப்படமாட்டாது. வினாத்தாள் புத்தகத்திலேயே எழுதிக்கொள்ளலாம். எளிதில் தெரியும்படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே நீட் தேர்வு அறையில் அனுமதிக்கப்படும். மாணவர்கள் ஷூ அணிந்து வர அனுமதியில்லை. முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.