கடந்த 2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி இருப்பதாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் உதித்சூர்யா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முறைகேடு உறுதி செய்யப்பட்டது. பிறகு, மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்றது. அதில், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என இதுவரை 14 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதி, சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீது என்பவர் தேடப்பட்டு வந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகரில் வசித்துவருகிறார். ஓராண்டுக்கு மேலாக இடைத்தரகர் ரஷீது தேடப்பட்டுவந்த நிலையில், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் இன்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ரசீதை மதுரைச் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.