செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "5,8- ஆம் வகுப்புக்கு தற்போதுள்ள நடைமுறையிலேயே தேர்வு நடைபெறும். மேலும் மாணவர்களின் திறனை அதிகப்படுத்த மீண்டும் பயிற்சி அளிக்கப்படும். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி அல்ல.
5,8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திருப்பி தர வேண்டும். தேர்வு ரத்தானதால் வசூலித்த தொகையை திருப்பி தருவது தான் ஆசிரியர்களின் கடமை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து முழு விவரம் வரவில்லை; வந்தால் அது பற்றி ஆய்வு செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் இந்தியை விருப்பப்பாடமாக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், ஆசிரியர்கள் இருக்கின்ற படங்களை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும் என்று என்றார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தால் இடையில் நாங்கள் தான் மாட்டிக்கொண்டுள்ளோம். நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டது காங்கிரஸ்தான்; ஆனால் அவர்கள் தான் விலக்கு கேட்டு போராடுகிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கோராமல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன." இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.