நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. பின்னர், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று, தங்கள் தரப்பு கருத்துகளைக் கூறினர். அதன் தொடர்ச்சியாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று விரிவாகப் பேசினர்.
நீட் விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க.வைத் தவிர்த்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டதாகச் சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மீது ஆளுநர் எப்போது நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.