கோப்புப்படம்
திருச்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக மாத வாடகைக்கு கார் எடுத்துச் சென்ற நபர் வாடகையும் கொடுக்கவில்லை, காரையும் காணவில்லை என்று தேடத் தொடங்கினார்கள். 'பொண்ணு கல்யாண பத்திரிக்கை கொடுக்க கார் வேணும்' என்று ஒரு நண்பர் மூலம் வந்து காரை எடுத்துச் சென்றார். காரும் வரல வாடகையும் வரல என்று திருச்சியில் 15 க்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருந்தனர்.
சிலரது காரில் இருந்த ஜிபிஎஸ் மூலம் தேடியபோது அந்த கார்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தென்னந்தோப்புகளில் நிற்பது தெரிய வந்தது. இந்நிலையில் தங்கள் கார்களை பார்க்க ஒவ்வொருவராக திரண்டு பேராவூரணி வந்தனர். சுமார் 15 பேர் ஏமாற்றப்பட்டு வந்திருந்தனர். சம்பந்தப்பட்ட கார்களை வைத்திருந்தவர்களிடம் கார்கள் குறித்துக் கேட்டபோது, 'பணம் கொடுத்து வாங்கி இருக்கிறோம். நாங்கள் கொடுத்த பணம் கிடைத்தால் காரை தருகிறோம்' என்று கூறிவிட, அனைவரும் பேராவூரணி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இத்தனை கார்களையும் திருடி விற்ற சக்திவேல் என்கிற நபர் திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சக்திவேல் பேராவூரணி மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் என்பதும், கடந்த பல வருடங்களாக திருவானைக்காவல் பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று மாத வாடகைக்கு கார் எடுத்து வந்து குறைந்த விலைக்கு விற்பதும் தெரியவந்தது. மேலும் மாஜி ஒருவரின் கருப்புப் பணத்தை குறைந்த வட்டிக்கு கொடுப்பதாகக்கூறி ஆவணங்கள் தயாரித்து முன்பணம் வாங்கிக் கொண்டு ஆவணங்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது பேராவூரணி சுற்றியுள்ள கிராமங்களில் சக்திவேல் விற்ற வாகனங்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் பல திருட்டுக் கார்களை வாங்கிய நபர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களின் உதவியை நாடியுள்ளதும் தெரிய வந்துள்ளது. முழுமையாக விசாரித்தால் பல கோடிக்கான மோசடிகளும், மோசடிக்கு துணைபோனவர்கள் பற்றியும் அறியலாம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.