சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர் பெண்ணுக்கு கடன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் மதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் பெறும் முனைப்பில் இருந்த அந்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், 'இன்ஸ்டன்ட் லோன் ஆப்' மூலம் கடன் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என தெரிவித்த நிலையில், கடன் தருவதாக ஒப்புக்கொண்ட அந்த நபர், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நம்பி புகைப்படம் மற்றும் அவர் கேட்ட ஆவணங்களை அப்பெண்ணும் அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகு அப்பெண்ணைத் தொடர்பு கொண்ட அதே மர்ம நபர், 30 ஆயிரம் ரூபாய் கடன் ரெடியாகி விட்டது. ஆனால் அதற்கு 3,000 ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது புகைப்படத்தினை தவறாகச் சித்தரித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார் அந்த மர்ம நபர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.