Skip to main content

"நெடுவாசல் போராட்டம் ஒரு வாரத்தில் தொடங்கும்" - வைகோ

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
kai

ஒரு வாரத்தில் நெடுவாசல் போராட்டம் தொடங்கும் நிலை உள்ளதாக புளிச்சங்காடு கைகாட்டியில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வை.கோ. பேசினார். 

 

காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வை.கோ கடந்த 4 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் சுற்றுப்பயணம் செய்த வருகிறார். 4 வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டிக்கு வந்த போது ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திருஞானம் மற்றும் எல்.என்.புரம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தர்முத்துக்குமார் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். அணவயல் ம.தி.மு.க சார்பில் நாட்டிய குதிரைகளின் அணிவகுப்போடு வரவேற்று கொடுக்கப்பட்டது. 

 

திறந்த வேனில் நின்றபடியே வை.கோ பேசியதாவது.. "காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு செயல். காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் சுமார் 20, 30 ஆண்டுகளில் தமிழ்நாடு பாலைவனமாக மாறும். அப்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிமாடு விலைக்கு நிலங்களை வாங்கிவிடலாமென கருதுகின்றன. இதற்கு மத்திய அரசு துணைபோகிறது. அவ்வாறு காவிரி தண்ணீர் இல்லாவிட்டால் தற்போது எதிர்த்து போராடிக்கொண்டிருக்கக்கூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற எரிபொருட்களை எடுப்பதுதான் இவர்களின் நோக்கமாகும். அப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வளமாகும். நமக்கு விவசாயம் பொய்க்கும். மத்திய அரசுக்கு வருமானம் கொட்டும்.

 

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு ஆதரவு தரவேண்டும்' என நெடுவாசல் பகுதி மக்கள் என்னை சந்தித்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு திட்டமிடலாம் என கூறியுள்ளேன். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராது. எனவே, நாம் ஒரு வருடம் தாக்குப்பிடித்தோமேயானால் நாம் எதிர்த்து வரும் எந்த திட்டமும் செயல்படுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தி விடலாம்.

 

இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் துரோகம் செய்துவிட்டது. எனவே தமிழகமே மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால்தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். தெலுங்கானாவில்  தொடர்ந்து 3 ஆண்டுகள் போராட்டம் நடந்தது. சாதித்துவிட்டார்கள். நான் அழைக்க வந்திருப்பது அமைதி போராட்டத்திற்கு தான். அடுத்த வருடம் மீண்டும் வருவேன். அப்போது என் பேச்சு வேறு மாதிரியாக இருக்கும் அப்போது நிஜ போராட்டத்திற்கு அழைக்க வருவேன்.

 

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் பெயரில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில், திட்டத்தை ஒப்பந்தம் எடுத்துள்ள ஜெம் நிறுவனம் , திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது . இதை உடைத்து மீத்தேன் திட்டத்துக்கு பெற்ற தீர்ப்பைப் போன்று இதற்கும் நல்ல தீர்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

சார்ந்த செய்திகள்