தூக்கத்தை மறந்து இரவு பகலாகப் படித்துத் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவராகிவிட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மாணவனின் வாழ்நாள் கனவு. அவர்களின் இந்தக் கனவிற்கு முட்டுக்கட்டையாக நீட் தேர்வு வந்தாலும் அதையும் எதிர்கொண்டுதான் வருகின்றனர். நன்றாகப் படித்தும் நல்ல மார்க் வாங்கியும் மருத்துவம் போக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பல மாணவ மாணவியர்கள் தற்கொலையும் செய்து கொண்டது தாங்க முடியாத துயரம் என்றாலும், தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிற மாணவர்கள், பயிற்சி மையத்தில் தங்களுக்கு ஏற்படுகிற கொட்டடிச் சித்ரவதையைக் கூட வெந்து போய் புழுவாய் துடித்துக் கொண்டிருப்பது கூட கொடுமையின் உச்சம். அப்படிப்பட்ட மிருகத்தனமான சித்ரவதை நெல்லை நீட் பயிற்சி மையத்தில் வெடித்துக் கிளம்பி தென்பக்கத்தையே உறைய வைத்திருக்கிறது.
அண்மைக்காலமாக, நீட் தேர்வில் வெற்றி மருத்துவ சீட் என்ற கனவிலிருக்கும் மாணவ மாணவியர்களின் வெறித்தனத்தையே முதலீடாக்கி வியாபார நோக்கில் பல்வேறு நகரங்களில் வேர்விட்டன நீட் தேர்வு பயிற்சி மையங்கள். இதில் முதன்மையானது என மாணவர்களால் கணிக்கப்பட்டது கேரளாவின் கொச்சி ஆலப்புழை நகரங்களிலுள்ள நீட் பயிற்சி மையங்களாம். பிக் அப் பண்ணினால் வெற்றி, மெடிக்கல் சீட் உறுதி என்று பிம்பத்தை அந்த மையங்கள் உருவாக்கியதின் விளைவு தமிழக மாணவர்கள் கூட அந்தக் கேரள நீட் மையங்களை நாடுகின்றனர். ஆண்டுக்கு 80 ஆயிரம் நீட் பயிற்சி கட்டணம். தேர்வின் வெற்றி விகிதங்களைக் கொண்டு இந்தக் கட்டணம் உயரும். அதன் மார்க்கெட் மதிப்பு ஏறும். பிறவைகள் தனி என்பது அந்த மையங்களின் வரை முறை. இந்த ரூட்டில் அந்த மையங்கள் கல்லாக்கட்ட அதே பாணியில் கேரளாவின் கொச்சிப் பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நெல்லையின் மேலப்பாளையம் ஏரியாவை ஒட்டி ஜல் நீட் பயிற்சி மையத்தை ஓப்பன் செய்திருக்கிறார்.
பயிற்சியின் அங்கமான வேதியியல் பாடப்பிரிவை முன்னணியாகக் கொண்டு பயின்றவர் என்பதால் தனது நீட் பயிற்சி மையத்தில் அந்தப் பிரிவில் மாணவ மாணவியர்க்குப் பயிற்சி கொடுத்து வந்தார். பிற சப்ஜெக்ட்களுக்கும் அவ்வப்போது கோச்சர்கள் வந்து போவதுண்டு. கேரளா, சென்னை, மதுரை, நாகர்கோவில், நெல்லை என்று பல நகரங்களிலும் ஜலாலுதீன் அகமது நீட் மையங்களை ஆரம்பித்திருக்கிறார். பிற மையங்களைப் போன்று வருடத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் அடிப்படையில் அவரது நீட் பயிற்சி மையத்தில் மாணவ மாணவியர் பயிற்சிக்காகச் சேர்ந்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாகக் கடந்த நீட் தேர்வில் இவரின் ஜல் நீட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சீட்டையும் பெற்றது பெரிய விஷேசமாகப் பார்க்கப்பட்டதால் இந்த வெற்றியே இவரின் ஜல் நீட் பயிற்சி மையத்தைப் பிரபலப்படுத்திவிட்டது. கல்விச் சந்தையில் இந்த மையத்தின் கட்டணமும் எக்குத்தப்பாய் எகிறியிருக்கின்றன.
நடப்பு வருடத்தேர்வுக்காக ஜலாலுதீனின் ஜல் நீட் பயிற்சி மையத்தில் வெளியூர், உள்ளுர் மாணவ மாணவியர்கள் போட்டி போட்டுக் கொண்டு சேர்ந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஒரு வருடக் கட்டணமாக ஒன்று, ஒன்றே கால், ஒன்றரை லட்சங்கள் என்று இஷ்டத்திற்கு வசூல் செய்யப்பட்டுள்ளனவாம். இதில் வெளியூர் மாணவ மாணவியர்க்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதற்கான பொறுப்பு வார்டன் அமீர் உசேன். இப்படி அடை போன்று மாணவர்கள் சேர்ந்ததால் ஒரு பேட்ச் கோச்சிங் மட்டுமே நடத்தப்பட்டு அந்த மையத்தில் பேட்ச்சிற்கு 60 மாணவர்கள் என்று மூன்று பேட்ச் கோச்சிங் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறதாம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வசதியானவர்களின் வீட்டுப் பிள்ளைகள் இந்த மையத்தில் பயிற்சியிலிருந்திருக்கின்றனர்.
தன்நிலை உயரும் போது பணிவும் அக்கரையும் வேண்டும் என்பதைக் கொஞ்சம் கூட மையத்தின் அட்மின் கொள்ளவில்லை போலும். மாறாக முன்னர் தந்த வெற்றி அவரை மிதப்பின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறதாம். கூடுதல் வெற்றி, தன்மையத்தின் மீதான ஈர்ப்பு வியாபார நோக்கம் இவைகளே அட்மின் ஜலாலுதீன் அகமதை ஆக்கிரமித்திருக்கிறதாம். இதனையே மனதில் கொண்ட மைய அட்மின் மாணவ மாணவிகளின் மீது டிசிப்ளின், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு என்ற நோக்கத்தில் கடுமை காட்டத் தொடங்கியிருக்கிறாராம். க்ளாசுக்கு வரும் மாணவ மாணவியர்களிடம், என்றுமில்லாத வகையில் அணிந்து வந்த செருப்புகளை, இங்க போடு, அங்க போடுன்னு கண்டிப்பு காட்டியிருக்கிறார். வகுப்பில் அங்குமிங்கும் திரும்பக் கூடாது. நேராகப் பார்க்க வேண்டும். இங்கே உட்காராதே, அங்கே உட்காராதே என்று மாணவர்களிடம் தினமும் தொணதொணத்திருக்கிறார் அட்மின் ஜலாலுதீன். இதனால் மாணவர்கள் கவனச் சிதறலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
ஒரு சமயம் வகுப்பிற்கு கோச்சர் வருவதற்குத் தாமதமானதால் பயிற்சி மாணவர் ஒருவர் அசதியில் சற்று கண்ணயர்ந்திருக்கிறார். இதைப் பின்னர் தெரிந்து ஆத்திரப்பட்ட அட்மின் ஜலாலுதீன் அந்த மாணவரை வரச் செய்து சட்டையைக் கழற்றச் செய்து மூங்கில் பிரம்பால் வெளுத்து வாங்கியிருக்கிறார். வலி பொறுக்கமாட்டாமல் அந்த மாணவன் கதறியும் விடாத அட்மின் அவன் முதுகை ரத்த விளாறாக்கியிருக்கிறாராம். அதையடுத்து சில நாட்களில் பயிற்சி மாணவர்கள் சிலர் படிக்காமல் அங்குள்ள நூலகமருகே தூங்கியதைக் கண்காணிப்பு கேமராவில் பார்த்த அட்மின் அவர்களை வரிசையாக வரவழைத்து சட்டையைக் கழற்றச்சொல்லி பிரம்பால் முதுகு, தலை, கால், தோள்பட்டை என வெளுத்து வாங்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று 16-17 மாணவர்களுக்கு மையத்தின் உள்ளே கேள்வி கேப்பாரின்றி அடி சித்ரவதைகள் நடத்தப்பட்டுள்ளனவாம்.
ஒரு சமயம் பயிற்சிக்கு வந்த மாணவி ஒருவர், தன் செருப்பை வரிசையில் விடாமல் கிளாசிற்கு வந்தார் என்பதற்காக மாணவி ஒருவரின் செருப்பை எடுத்து ஓப்பன் வகுப்பிலேயே மாணவர்கள் முன்னிலையிலேயே அந்த மாணவி மீது அட்மின் வீசி எறிய, மாணவி கூசிக் குறுகிப் போயிருக்கிறார். இப்படி மையத்தில் தங்களுக்கு நேர்ந்த சித்ரவதையை மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் சொல்லியும் இருக்கிறார்களாம். என்னப்பா செய்ய பணம் லட்சம் மேல கட்டியிருக்கிறேன் வெளிய வந்தா பணம் போயிறும். எப்புடியாவது தாங்கிக்கோ. படி. என்று பெற்றோர் சொன்னதால் வெளியில் சொல்லமுடியாமல் வேதனையை அனுபவித்திருக்கிறார்கள் பயிற்சி மாணவர்கள் என்பதும் கசிந்திருக்கிறது. வெந்து போன மனதுடன் தான் அவர்களின் பயிற்சி ஓடியிருக்கிறதாம்.
இதனிடையே மாணவர்களின் முதுகில் ரத்தக் காயமிருப்பதை அவர்களின் விடுதியின் வார்டன் அமீர் உசேன் தற்செயலாகக் கவனித்துக் கேட்டபின், விஷயம் தெரிந்து அதிர்ந்திருக்கிறாராம். அதையடுத்தே கடந்த மாதமே மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சித்ரவதையை வீடியோவாக அவர் பதிவு செய்திருக்கிறாராம். அக் 1ஆம் தேதி முதல் அவர் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாராம். அதனையடுத்து அப்போதே மாணவர்கள் சிலர் அந்த ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க அந்தக் காவல் நிலையமோ இதை அத்தனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
இப்படி அதிக தேர்ச்சி விகிதத்தை அடைய மையத்தில் சித்ரவதைகள் தொடர்வதால் அதற்கு முடிவு கட்ட வேண்டிய தீவிரத்திலிறங்கிய பயிற்சி மாணவர்கள் நடந்தவற்றை ஆதாரத்துடன் மனித உரிமைக் கமிசனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்தே நடந்த சித்ரவதை தொடர்பான வீடியோக்கள் வெளியேறி வைரலாக மாநகரம் அதிர்ந்திருக்கிறது. அதே சமயம் அக்டோபர் 18 அன்று நெல்லையில் விசாரணைக்காக முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்திற்குத் தெரிய வர நீட் பயிற்சி மையம் வந்த அவர் மைய ஒருங்கிணைப்பாளர் மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அது சமயம் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் உதவி துணை போலீஸ் கமிசனர் உடனே வர வேண்டும் என்று அவர் உத்தரவிட போலீஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லையாம். இதையடுத்து அவர்கள் வருகிற 21ஆம் தேதி சென்னை மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார்.
பின்னர் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் விஜி ஆணைய உறுப்பினர் கண்ணதாசனிடம் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவான மைய உரிமையாளரைத் தேடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மையத்திற்கு நேரடியாகச் சென்ற மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களின் காயத்தைப் பார்த்து எந்தெந்த மாணவர்கள் காயமடைந்தனர் என ஆய்வு செய்து குறிப்பெடுத்துக் கொண்டு சென்றிருக்கிறாராம். நாம் மாணவர்களைச் சந்திப்பதற்காக பயிற்சி மையம் சென்றபோது. அவர்கள் அவ்வளவாக வெளியே வருவதில்லை என்று தெரிவித்த அக்கம் பக்கத்தவர்கள், அங்கே மாணவர்கள் தாக்கப்படுகிற சம்பவம் நடக்கத்தான் செய்கிறது. இதற்குத் தொழில் போட்டியும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அனைத்து நீட் மையங்களும் வியாபார நோக்கில் தான் செயல்படுகின்றன. அதிலும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது மிருகத்தனமாக தாக்கப்படும் காட்சி மனதை உலுக்குகின்றன. அரசாங்கம் நீட் மையங்களைக் கண்காணித்தாலே சித்ரவதைகள் நடக்காமலிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார் நெல்லை சி.பி.எம். மா.செ.வான ஸ்ரீராம். தறிகெட்டு ஓடுகிற குதிரைக்குக் கடிவாளம் போடவேண்டியது ரொம்ப, ரொம்ப அவசியம். அரசு உடனே தலையிட வேண்டிய தருணமிது.