திருச்சி விமானநிலையத்திற்கு துபாய், சார்ஜாவிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்திவருவது தொடர்கதையாகிவருகிறது. இதனால், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திருச்சி விமானநிலையத்தில் சோதனையைத் தீவிரப்படுத்திவருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (27.08.2021), கோவை மற்றும் மதுரை அதிகாரிகள் சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகள் மீது சந்தேகம் கொண்டு, அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினார்கள். இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது உடைமைகளை சோதனை செய்ததில், 1.5 கிலோ தங்கத்தை எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 73 லட்சம் ஆகும்.
அதேபோல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் ஆசனவாயில் மறைத்துவைத்து 575 கிராம் தங்கத்தைக் கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 9.5 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். ஒரேநாளில் விமானத்தில் ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.