துணை முதல்வரான ஓ.பி.எஸ். தொகுதியில் உள்ள மீனாட்சிபுரம் அருகே இருக்கும் பொட்டல் களத்தை சேர்ந்த கெளர் மோகன் தாஸ் என்பவர் அப்பகுதியில் இயற்கை வேளாண்மை பண்ணை வைத்து இருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாகவே கௌர் மோகன் தாஸ்சை கண்காணித்து வந்த காவல்துறையினர், திடீரென போடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் கௌர் மோகன் தாஸ் காரை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ஏ.கே.47 துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி, இரட்டை குழல் துப்பாக்கி என மூன்று துப்பாக்கிகளோடு, கை துப்பாக்கி மூன்றும் கைப்பற்றினார்கள். அதோடு அரிவாள், கத்தி, ஈட்டி, வாள் போன்ற எட்டு ஆயுதங்களையும் மற்றும் 20 க்கு மேற்பட்ட செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
இப்படி திடீரென ஆய்வின்போது துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், செல்களை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு கௌர் மோகன் தாஸையும் காவல்துறையினர் கைது செய்து, அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி, ஆண்டிபட்டி வருசநாட்டு பகுதிகளில் நக்சலைட் நடமாட்டம் இருந்ததன்பேரில் சிலரை காவல்துறையினர் கைது செய்தும் இருக்கிறார்கள். அதோடு மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டமும் இருந்து வருகிறது.
அப்படி இருக்கும்போது, அந்த நக்சலைட்டுகளுக்கும் கௌர் மோகன் தாஸ்க்கும் தொடர்பு இருப்பதின்மூலம், துப்பாக்கிகள் பரிமாற்றம் நடந்து வருகிறதா? அல்லது அந்த நக்சலைட்டுகளுக்கு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகிறரா? என்ற பல சந்தேகங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதோடு கௌர்மோகன் தாஸ்சுடன் தொடர்பு உடைய பத்துக்கும் மேற்பட்ட நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.