கடலூர் மாவட்டம்: மங்களூர், சிறுபாக்கம், அடரி, பனையாந்தூர், வள்ளி மதுரம், பாசார், காஞ்சிராங்குளம், ரெட்டா குறிச்சி, வேப்பூர், கழுதூர், ஆவட்டி கல்லூர், பொடையூர் உட்பட கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பெருமளவில் மானாவாரி நிலங்களையே வைத்துள்ளனர்.
அதில் ஆடி மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது பண்படுத்தி ஆடி மாதம் பெய்யும் மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், கடலை, துவரை ஆகிய பயிர்களை பெருமளவு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த நிலங்களில் மழைக் காலத்திற்கு முன்பே ஜூன், ஜூலை மாதங்களில் தென்மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்கு வரும் செம்மறி ஆடுகள் பல ஆயிரக்கணக்கில் கொண்டு வருவார்கள். அந்த ஆடுகளை மேற்படி கிராமங்களில் வாழும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் இயற்கை விவசாயத்திற்காக இரவு நேரங்களில் ஆடுகளை கிடைக்கட்டும் வழக்கம் இருந்து வருகிறது.
ஒரு இரவுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்து ஆடுகளை கிடைமடக்க வைப்பார்கள். இதற்கு ஆட்டுக்கிடை என்று கூறுவதுண்டு. இரவு முழுதும் ஆடுகளின் கழிவுகள் நிலங்களில் விழும் அதை உழவு செய்து தானியங்களை விதைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். மேலும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது, அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இதேபோன்று ஆடு, மாடுகளை தங்கள் நிலத்தில் கிடைக்கட்டி, அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்து அந்த தானியங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளனர் இப்பகுதி விவசாயிகள். உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் விளைபொருட்களை நிலத்திலிருந்து விளைய வைக்கவேண்டும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.