Skip to main content

“கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளோம், எங்களுக்கு மரியாதை இல்லை” - நகரத்தார் வேதனை 

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

nattukottai nagarathar request 1000 permit card visit Annamalai during Deepam festival

 

புகழ்பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் தேரடி வீதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அவர்களால் 1872 தொடங்கப்பட்ட மெ.க அன்ன சத்திரத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

 

நவம்பர் 19 ஆம் தேதி சிறப்பு யாகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த விழாவில் தர்மபுரம் ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், பாதரக்குடி ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், செங்கோல் ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம், துழாவூர் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் பெருமக்கள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்து அருள் புரிந்தார்கள்.

 

தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டை நகரத்தாரால் பல்வேறு புராதன கோவில்களில் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நித்தியபடி அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு நகரத்தாரின் பங்கு அதிக அளவு உள்ளது. ஆசியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான வெள்ளி ரிஷபம் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் அண்ணாமலையார் கோவிலுக்கு உபயம் செய்யப்பட்டது. தேரடி வீதியில் உள்ள மெ.க அன்ன சத்திரத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 150 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நாட் கோட் சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இப்படி இராமேஸ்வரம் முதல் காசி வரை பெரும்பாலான புனித ஸ்தலங்களில் நகரத்தாரால் அன்னதானம் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். அதில், "அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர் நகரத்தார்களுக்கு முறையாக தீபத் திருவிழாவிற்கு உள்ளே செல்லும் அனுமதி அட்டை கொடுப்பதில்லை. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் அண்ணாமலையார் கோவிலுக்கு வெள்ளி ரிஷபா வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம்,  பிச்சாண்டவர் வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் நகைகளும் அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தியுடன் கொடுத்துள்ளோம். கோடிக்கணக்கில் நாங்கள்  அண்ணாமலையாருக்கு செய்திருந்தாலும்  நாட்டுக்கொட்டை நகரத்தாருக்கு உரிய அங்கீகாரத்தை கோவில் நிர்வாகம் தருவதில்லை. 

 

தமிழக அரசாங்கத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணாமலையார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் நாங்கள் வைக்கும் கோரிக்கை, தீபத் திருவிழா அன்று 100 நகரத்தார் குடும்பங்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு தீப திருவிழாவின் போது 1000 அனுமதி அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்