Skip to main content

கார்ப்பரேட் கான்செப்ட்!  திமுகவை தாக்கிய  தலைமைச்செயலாளர்! 

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

சென்னையில் நடந்த தேசிய வாக்களர் தினத்தில் திமுக மறைமுகமாகத் தாக்கிப் பேசிய தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பேச்சு அரசியல் வட்டாரங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
                

தேசிய வாக்காளர் தினம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 25- ந்தேதி நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற அந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சென்னை மாவட்ட ஆட்சிய சீதாலெட்சுமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மாணவ- மாணவியர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.
                

இக்கூட்டத்தில் மைக் பிடித்த தலைமைச்செயலாளர் சண்முகம் தேர்தல் நடத்தைகள், சீர்த்திருத்தங்கள், தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியம் என பல்வேறு விசயங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’மக்களாட்சி முறையில் சீர்கேடுகள் வருவதற்கு காரணமே மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான். அவைகள் மெல்ல மெல்ல மாறி வருகிறது. முன்பெல்லாம் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கும். தற்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நல்ல ஒரு மாற்றம். ஆனாலும், தேர்தலில் மக்களின் ஈடுபாடுகளில் மாற்றம் வரவேண்டும். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும். 
 

national voters day celebrating chief secretary shanmugam speech dmk party

அரசியல் லாபங்களுக்காக சாதி, மதங்களை பயன்படுத்தும் அபாயம் உருவாகியிருக்கும் நிலையில் இன்னொரு அபாயமும் உருவாகியிருக்கிறது. அதாவது, உண்மையற்ற பொய்யான செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்து மக்கள் மனதில் பதிவு செய்கின்றனர். மார்க்கெட்டில் பொருட்களை விற்பதற்காகத்தான் விளம்பர யுக்தியை பயன்படுத்துவர். அந்த விளம்பர யுக்திகள் தற்போது அதிகாரத்திற்காக அரசியலில் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. இது, எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. அரசியல் ஆலோசகர்கள் என சிலர் செயல்படுகின்றனர். 
 

கட்சியிலுள்ள நம்முடைய ஆட்கள் சொல்ல முடியாத தகவல்களையா அரசியல் ஆலோசகர்கள் சொல்லிவிடப் போகிறார்கள்? மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களிடம் போய் கேட்டாலே தெரிந்துவிடும். அதனை செய்யாமல் இதற்காக ஒருவரை அழைத்து வந்து, அவரை அரசியல் ஆலோசகராக நியமித்து, அவர் ஆய்வு செய்து சொல்வதும், அதற்கேற்ப அரசியல் நடத்துவதும் இப்போது நடக்கிறது ’’ என தற்கால அரசியல் குறித்து விளக்கமாகப் பேசினார் தலைமைச்செயலாளர் சண்முகம்.    

national voters day celebrating chief secretary shanmugam speech dmk party

அரசியல் குறித்து அவருடைய பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உருவாக்க, அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கத்தை தேடி விவாதித்துக்கொண்டனர் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். நம்மிடம் பேசிய முதன்மை செயலாளர் அந்தஸ்திலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ‘’தேசிய அளவிலான அரசியலை கார்ப்பரேட் நிறுவனம் தான் முடிவு செய்கிறது. அந்த வகையில், பிரதமர் மோடி துவங்கி பல்வேறு தலைவர்களுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அது ஒரு கார்ப்பரேட் அரசியலாகவே உருமாறி நிற்கிறது. 


அந்த வகையில் கடந்த 2016 தேர்தலில் அரசியல் ஆலோசகர் என்கிற கான்செப்ட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காகவும், பாமக அன்புமணிக்காகவும் தனித்தனி டீம் களமாடியது. தற்போது அந்த கான்செப்ட்டில் திமுகவுக்காக களமிறங்கியிருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். திமுகவின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுகவே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் ஆலோசகர் என தலைமைச்செயலாளர் சண்முகம் தாக்கிப் பேசியிருப்பது திமுகவின் கார்ப்பரேட் கான்செப்டை மனதில் வைத்துதான். தலைமைச்செயலாளராக இருப்பவர் பிரதான எதிர்க்கட்சியின் அரசியலை மறைமுக தாக்கியிருக்கிறாரே என அதிகாரிகளுக்கெல்லாம் அதிர்ச்சிதான் ‘’என விவரித்தனர்.


 

சார்ந்த செய்திகள்