தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கும், கிரிஜா வைத்தியநாதனுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதில், கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால், அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 5- ன் படி, நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக்கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால், இவரது நியமனம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், கிரிஜா வைத்தியநாதனுக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.