சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட கோவில் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கனகசபையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க கோரி தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெற்கு வீதியில் அமைப்பின் மாவட்டச் செயலாளர் பாலு தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி, பொருளாளர் காளியப்பன், பாடகர் கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மணியரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி, கனகசபையில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்குப் பேரணியாக வாத்தியங்கள் முழங்கத் தீட்சிதர்களைக் கண்டித்தும், தமிழில் வழிபட அனுமதி அளிக்க அரசை வலியுறுத்தியவாறும் பேரணியாக வந்தனர்.
இவர்கள் அனைவரும் தெற்கு கோபுர வாயில் அருகே வரும்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லையெனக் கூறினார்கள். அப்போது பேரணியாக வந்த அனைவரும் சாலையிலே அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த காவல்துறையினரிடம் கடந்த 2008-ல் தமிழில் வழிபட அரசு ஆணை வெளியிட்டதைக் காண்பித்து, ‘இது வழிபாட்டு உரிமை.. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்றும் அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர். தமிழில் வழிபடக் கூடாது என்று தடையாணை இருந்தால் காட்டுங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம் என்றனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களின் போராட்டம் மதியம் 3 மணிவரை தொடர்ந்தது. 5 மணி நேரம் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டமாக நீடித்ததால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒரு வாரக் காலத்திற்குள் இதற்கு சரியான முடிவு எட்டப்படும் எனவும், உள்ளே சென்று தேவாரம் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் எழுத்துப்பூர்வ உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் மதியம் 3 மணிக்கு மேல் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர். இதனால் இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.