ஆட்சியில் இருக்கின்ற வரை, எது கிடைத்தாலும் லாபம் என கண்மாய்களில் மண்ணை அள்ளி காசுப் பார்க்கும் ஆளுங்கட்சியினரை எதிர்த்து தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர் நரிக்குறவ இன மக்கள்.
சனிக்கிழமையன்று காலை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு செல்லும் பரப்பரப்பில் அனைவரும் இருக்க, நகரின் பிரதான சாலையை மறித்து படுத்தும், உட்கார்ந்தும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர் கழனிவாசல் வேடன் நகரில் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள், வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது சாமர்த்தியத்தை காட்ட, " நாங்கள் எளியவர்களே எங்களிடம் உங்கள் ஜம்பத்தைக் காட்டவேண்டாம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் மண்ணை சுரண்டுவதை நிறுத்துங்கள். இல்லையெனில் எங்களைக் கொன்றுவிட்டு மண்ணை அள்ளிக்கொள்ளுங்கள்." என தங்களது உறுதியினைக் காட்டிய அம்மக்களிடம், " இங்கு பாதையை மறிக்க வேண்டாம். அனைவருக்கும் சிரமமாகும். சம்பவ இடத்தில் போராட்டத்தினை துவக்கலாம்." என சமூக ஆர்வலர்கள் எடுத்துக்காட்ட, அடுத்த நிமிடமே மண்ணை அள்ளிக்கொண்டிருக்கும் தங்களது குடியிருப்புப் பகுதியில் உட்கார்ந்து தங்களது போராட்டத்தினை துவக்கினர் நரிக்குறவ இனமக்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கு சமுத்திரக் கண்மாய் பகுதியில் கண்மாய்க்கரைகளைப் பலப்படுத்தும் நோக்குடன் 0.90 மீட்டர் ஆழத்திற்கு 6,750 கன மீட்டர் கிராவல் மண் அள்ளிக்கொள்ள ஆளுங்கட்சியினை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்காக காரைக்குடி பர்மா காலணியை சேர்ந்த சுப்பராயன் மகன் செல்லப்பாண்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக் கொடுத்தது. ஆனால், அதே சங்கு சமுத்திரகண்மாய் அருகில் உள்ள வேடன் நகரில் 70 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. " கண்மாயைப் பலப்படுத்துக்கின்றோம் எனும் நோக்கில் மிகுந்த ஆழப்படுத்தி வருகின்றனர். மண் அள்ளுவதால் மெகா பள்ளங்கள் ஏற்பட்டும் நாங்கள் பணிக்காக வெளியூர் சென்றுவிடும் நாட்களில் தனியாக இருக்கும் எங்களது குழந்தைகள் இதில் விழுந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. எங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த செயலை நிறுத்தாவிடில் போராட்டம் தீவிரமடையும்." என்கின்றனர் வேடன்நகர் பகுதி மக்கள். இதனால் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.