புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணம் ஆதிதிராவிடர்களுக்கு 350 லிருந்து 1200 ஆகவும், பொது பிரிவினருக்கு 750 லிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி உதவி தொகையை படிப்படியாக குறைத்து வருவதால் மாணவ மாணவிகள் பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் மக்களிடம் கருத்துக்களை கேட்காமலேயே ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை போன்று 234 சட்ட விதி அடிப்படையில் சட்டப்பேரவை அமையும் எனவும், சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் மேற்பார்வையில் இருக்கும் எனவும் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15-ஆவது சம்பள கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் இதுவரை மத்திய அரசும் அதற்கான முடிவும் எடுக்கவில்லை ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் 15-ஆவது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜனநாயக பேரழிவினை மத்திய அரசு செய்துள்ளது. இது மக்களின் அதிகாரத்தினை பறிக்கும் செயல்.
புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் தர தாமதப்படுத்துவதால் பட்ஜெட் போட தாமதமாகிறது.
இவ்வாறு கூறிய நாராயணசாமியிடம், ‘ப.சிதம்பரம் தமிழகத்திற்கு பாரமாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே...? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழக முதல்மைச்சர் எடப்பாடி ஒரு முதல்வர் போல் பேசவில்லை. அவர் பதவியை உணர்ந்து செயல்பட வேண்டும். மற்ற அரசியல் கட்சியினரை பற்றி அவர் பேசாமல் இருப்பது நல்லது” என்றார்.