புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-ஆவது பிறந்தநாள் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத், முதலமைச்சர் நாராயணசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “ கடந்த 1984-ம் ஆண்டு ராஜீவ்காந்தி புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது மூடிக்கிடந்த ரோடியர் மில்லை திறக்க கோரிக்கை வைத்தோம். அதைத்தொடர்ந்து பிரதமர் ஆனவுடன் மில்லை திறக்க ரூ.20 கோடியை ராஜீவ்காந்தி கொடுத்தார். அவர் பிரதமராக இருந்த காலத்தில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்று பாரபட்சம் காட்டியதில்லை. தென் மாநிலங்கள் மீது பற்றும், பாசமும் கொண்டவராக திகழ்ந்தார். தற்போது நாட்டை ஆளும் பாரதீய ஜனதா இந்தியாவை இந்துக்கள் ராஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறது. காஷ்மீரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறையில் உள்ளனர். அழகான, அமைதியான மாநிலமாக இருந்த காஷ்மீரில் இன்று மக்கள் அமைதியாக வாழ முடியாத நிலை உருவாகி உள்ளது.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் நிர்வாகத்தை முழுமையாக கையில் எடுத்துள்ளது. புதுவை பட்ஜெட்டில் இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கியுள்ளோம். மக்கள் அரிசி வழங்கும்படி கேட்கிறார்கள். ஆனால் கவர்னர் பணமாக கொடுங்கள் என்கிறார். மோட்டார் வாகன விற்பனை தற்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போகும். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, மதக் கலவரம் ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது “ என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், தமிழ் நாடு, புதுச்சேரி மாநிலங்களின் மேலிட் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் பேசும்போது, “ மத்தியில் உள்ள மோடி அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தி காஷ்மீர் மக்களின் ஜனநாயக குரல்வளையை நெறிக்கிறது. சுதந்திர இந்தியாவில் யூனியன் பிரதேசங்களை இணைத்து மாநிலமாக மாற்றும் நடைமுறைதான் இதுவரை இருந்து வந்தது. முதன்முறையாக காஷ்மீர் மாநிலத்தை பிரித்து 2 யூனியன் பிரதேசங்களாக்கி ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு சவால்கள் உள்ளது. ராஜீவ்காந்தியின் கனவை நனவாக்க வலுவான ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதே முதல் இலக்கு. மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் “ என்றார்.